அப்துல் கலாமுக்கு ஓர் அஞ்சலிக் கூட்டம் 17.03.2019

செய்தித்தாள் கட்டுரைகள்|

அப்துல் கலாமுக்கு ஓர் அஞ்சலிக் கூட்டம்

நேற்று மாலை, சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தின் எதிரில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பட்டிமண்டபத்தில் அமரர் கலாம் அவர்களுக்குப் புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கலாம் பற்றி என் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பின் செயலாளர் திரு.கெ.பக்தவத்சலம் எனக்குக் கட்டளையிட்டிருந்தார். முனைவர் ஒளவை நடராஜன் தலைமையில் கவிக்கோ அப்துல் ரகுமான், கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் ஆகியோருடன் நானும் கலாமுக்குப் புகழஞ்சலி செலுத்தினேன்.

கலாம் அவர்களோடு என் முதற்சந்திப்புப் பற்றியே என் உரை அமைந்தது. அந்த முதற்சந்திப்பு என்ற கதையின் கதாநாயகன் அப்துல் கலாமே என்றாலும், அதில் ஒரு முக்கிய பாத்திரமாகத் தோன்றிய முனைவர் ஒளவை நடராஜன் பற்றிக் குறிப்பிட்டேன். ஆம், சில சமயம் ஒரு கதையில், கதாநாயகனுக்குச் சமமான இடத்தை இன்னொரு பாத்திரம் பெற்றுவிடக் கூடும் என்பதற்கு இரண்டு எடுத்துக் காட்டுகள் சொன்னேன். ஒன்று, குகன் மூலமாகக் கவிச்சக்கரவர்த்தி, "ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா" என்று வியந்த பரதனையும், 'படிக்காத மேதை' திரைப்படத்தில் 'எங்கிருந்தோ வந்தான்' என்ற பாடலில் உணர்ச்சி பொங்க நடித்து, சிவாஜிக்கு ஈடான இடத்தை பிடித்த எஸ்.வி.ரங்காராவையும் குறிப்பிட்டேன். கலாமுடன் நிகழ்ந்த என் முதற்சந்திப்பில் அப்படி என்ன செய்தார் ஒளவை நடராஜன்?

08-12-1996 அன்று சென்னை ம்யூஸிக் அகடமியில், வானவில் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற பாரதி விழாவில் அந்தச் சந்திப்பு நடந்தது. அன்று நாங்கள் வழங்கவிருந்த பாரதி விருதை நேரில் பெற்றுக் கொள்ளக் கலாம் டில்லியிலிருந்து வந்திருந்தார். அப்போது அவர் குடியரசுத் தலைவராகவில்லை. அதே நிகழ்ச்சியில், "நமக்குத் தொழில் கவிதை" என்ற என் கட்டுரை நூலை வெளியிட்டுப் பேச டாக்டர் ஒளவை நடராஜனும் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சி தொடங்குமுன் ஒளவை என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்: கலாம் அவர்களுக்கு பாரதி விருது வழங்க ஏன் முடிவு செய்தோம் என்பதே அந்தக் கேள்வி.

"1994-ல் வானவில் பண்பாட்டு மையம் தோற்றுவிக்கப் பட்டபோது, என் இனிய நண்பர், திராவிட மாயை சுப்புவின் பரிந்துரையை ஏற்று, ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் பாரதி இசைவிழா கொண்டாடுவது என்றும், அவ்விழாவில் பாரதி கண்ட ஏதேனும் ஒரு கனவு மெய்ப்படத் தொண்டாற்றியுள்ள பெருமக்களுக்கு பாரதி விருது வழங்குவது என்றும் முடிவு செய்யப் பட்டது. "சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்" என்று பாடியவன் பாரதி. நம் நாடு அறிவியல் துறையில் மேம்பட்டுத் திகழ வேண்டும் என்பது அவனுடைய கனவுகளில் ஒன்று. அதுதான், நம் நாட்டு அறிவியல் மேதை கலாமுக்கு பாரதி விருது வழங்குகிறோம்."

இதுதான் நான் சொன்ன பதில். அதை உள்வாங்கிக் கொண்ட ஒளவை அவர்கள், அன்று அந்த மேடையில் பேசும் போது இது பற்றிக் குறிப்பிட்டுக் "கனவு காண்பவன் எல்லாம் கவிஞனோ, கலைஞனோ, அறிஞனோ இல்லை; எந்தக் கனவு வலுவுள்ளதாக இருந்து, அக்கனவு மெய்ப்பட வேண்டி மற்றவர்களுக்குச் செயலூக்கம் தந்து தூண்டுகிறதோ, அப்படிப்பட்ட கனவு காண்பவனே கவிஞன், கலைஞன், அறிவியல் மேதை" என்று மிகவும் நயம்படப் பேசினார். அந்த விழா நிறைவு பெற்றதும் ஒளவையின் பேச்சு, அதுவும் கனவு பற்றி அவர் குறிப்பிட்டது தம்மை உலுக்கிவிட்டதாகக் கலாம் என்னிடம் கூறினார். கலாம் அவர்கள் பிறகு நம் நாட்டின் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும், கனவு என்பது தூக்கத்தில் காண்பதில்லை, தூங்கவிடாமல் துரத்துவது என்று பேசி இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்று தூண்டியதும் நாம் அறிந்த செய்திகள். அப்படிக் கலாம் அவர்களைக் கனவு, கனவு என்று பேச வைத்தது 08-12-1996 அன்று ஒளவை அவர்கள் பேச்சில் குறிப்பிட்ட செய்தியே என்பது என் உள்மனத்துக்குப் புரிந்தது.

ஒரு கருத்துத் தழைத்து வளர ஒளவை அவர்கள் மூலம் விதை தூவப்பட்ட நிகழ்ச்சியில்தான் கலாமுடன் என் முதற்சந்திப்பு நிகழ்ந்தது. அதே நிகழ்ச்சியில், அதே ஒளவை இன்னொரு திருப்பத்துக்கும் விதை தூவினார். என் நூல் "நமக்குத் தொழில் கவிதை" வெளியிட்டுப் பாராட்டிப் பேசிவிட்டு, நிகழ்ச்சி முடிந்ததும் என்னிடம் தனியே ஒரு கேள்வி கேட்டார்: " உன் நூலில், கவிதை என்பது எதோ ஒரு மாயம் போலச் சித்தரித்திருக்கிறாயே ராஜா, கவிதை யதார்த்தத்தைப் பாட வேண்டாமா, வெறும் கனவுலகிலேயே கவிஞர்கள் வாழ்ந்துவிடலாமா? கலாம் போன்ற அறிவியல் மேதைகளை வைத்துக் கொண்டு, இன்னும் பஞ்ச பூதங்கள் என்று நிலம், நீர் காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவற்றைச் சொல்லிக் கொண்டு, இன்னும் கனவிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோமே" என்பதுதான் அவர் கேள்வி. அன்றிரவு என்னைத் தூங்கவிடாமல் தாக்கி அன்றிரவே நான் எழுதத் தொடங்கிய நூல்தான், " இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறூ".

ஓர் அறியல் மேதைக்குக் கனவு காணத் தூண்டிய உபதேசம் வழங்கிய குருவாகவும், கவிதைக் கனவிலேயே மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞனை, அதாவது என்னை, அறிவியல் பாதை நோக்கித் திருப்பிய குருவாகவும் ஒரே நேரத்தில் முனைவர் ஒளவை அவர்கள் காலத்தின் கருவியாக அன்று செயல்பட்டதை நேற்றைய கூட்டத்தில் நான் விளக்கினேன். பிறகு கலாம் அவர்களை மேலும் இரண்டு முறை நான் சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டுவிட்டு, எப்படியெல்லாம் இருந்தார் என்பதற்காகவும், எப்படியெல்லாம் இல்லை என்பதற்காகவும்  பாராட்டப்பட்ட மாமனிதர் கலாம் என்று என் உரையை நிறைவு செய்தேன்.

அடுத்துப் பேசிய நண்பர், கலைவாணன் நெகிழ்ச்சியோடு தாம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்பட்டதையும் அங்கே 45 நிமிடங்கள் கலாமுடன் உரையாடிய நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்தார். கவிக்கோ அப்துல் ரகுமான் தமக்கே உரிய பாணியில் தாம் குடியரசுத் தலைவர் மாளிகையில் கலாம் அவர்களைச் சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். கலாம் எழுதிய ஒரு கவிதையைக் கவிக்கோ அழகாகச் சொல்லிக் காட்டினார்: "ஒரு பிள்ளைப்பூ அம்மாப் பூவிடம் கேட்டது, நாம் ஏன் மலர்கிறோம் என்று. அம்மாப்பூ சொன்னது, அதோ பார் ஒரு மயில் ஆடுகிறது, ஒரு மான் துள்ளியோடுகிறது, ஒரு குயில் கூவுகிறது, அப்படித்தான் நாமும் மலர்கிறோம்; நம்மைப் பார்த்தாவது மனிதர்கள் மென்மை பெறக்கூடும் என்பதாலும் நாம் மலர்கிறோம்". இந்த அழகிய கவிதையைச் சொல்லிவிட்டு கவிக்கோ ஒரு கேள்வி கேட்டார். " இலக்கண, இலக்கியம் படித்த புலவர்களாகிய நாம் பிள்ளைப்பூ, அம்மாப்பூ என்று எழுதியிருப்போமா? ஓர் அரும்பு அல்லது மொட்டு, மலர்ந்த பூவைப் பார்த்துக் கேட்டது என்றுதான் எழுதியிருப்போம். பிள்ளைப்பூ, அம்மாப்பூ என்றெழுத கலாமால்தான் முடிந்தது என்று ரசித்துச் சொன்னார். ஷேக்ஸ்பியரின் கவித்துவத்தை "கற்பிக்கப்படாத கற்பனையோட்டம்" (Untutored Fancy) என்று விமர்சகர்கள் கொண்டாடுவதை நினைத்துக் கொண்டேன்.

Create AccountLog In Your Account