மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! ( பகுதி - 28 )

செய்தித்தாள் கட்டுரைகள்|

தினசெய்தி நாளிதழில் 23.03.2020 அன்று வெளியான கட்டுரை

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! ( பகுதி - 28 )

‘‘தத்துவத்தின் சின்னம் பாரதியார்..!’’

ஔவை நடராசன்,

மேனாள் துணைவேந்தர்,

=========================================

புரட்சித்தலைவரின் திரைப்படப் பாடல்கள் காதலும் வீரமும் சமூக அக்கறையையும் ஆழமாக எடுத்தியம்பும் அற்புதப் பாடல்கள். வேறெந்த நாயகரின் படங்களுக்கும் அமையாத சிறப்பு புரட்சித்தலைவரின் படப்பாடல்களுக்கு உண்டு எனலாம். அப்படி அனைவராலும் பாராட்டும்படியான பாடல்கள் அமையக் காரணமே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் தமிழ் மீதும் தமிழிலக்கியங்கள் மீதும் கொண்டிருந்த ஈடுபாடும் ஈர்ப்பும் எனலாம். ஆதலால்தான், பாடலாசிரியர்களிடம் தேர்ந்த பாடல்களைத் திறம்படப் பெறுவார்.

கவிஞர்கள் மீது அளப்பரிய பற்றும் பாசமும் கொண்டவர். எத்தனையோ கவிஞர்கள் அவரால் புகழின் உயரம் தொட்டு பூத்திருக்கிறார்கள்.

பாரதியார் கவிதைகளை விரும்பிக் கேட்பார். ரசித்து மகிழ்வார். அவ்வகையில் 11.12.1981 அன்று எட்டயபுரத்தில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு தொடக்க விழாவில் அவர் ஆற்றிய உரையில் பாரதியாரின் புகழை ஓங்கி ஒலித்தார்.

இதோ அந்த உரை…

‘‘சுப்பிரமணிய பாரதியாரின் நூறாவது பிறந்த நாள் இன்றைய தினம் தமிழக மக்களால் அனைத்து மக்களால் கொண்டாடப்படும் விழாவாக உருவாகி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.  அவர் செயல்களெல்லாம் அவர் வாழ்ந்த காலத்தில்  செய்த கடமைகளை எல்லாம் நாம் யாரும் மறக்க முடியாது- வரலாறு மறக்காது என்ற வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.  அவரது தியாகங்கள் நமக்கு எடுத்துக்காட்ட - வழி வகுக்க இந்த நாள் பயன்படும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    பாரதிக்கு முன்பு எத்தனையோ கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள்.  அவருக்குப் பின்னரும் எத்தனையோ கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள், தோன்றிக் கொண்டிருக்கிறார்கள்.  பாரதி எடுத்துச் சொல்லிய கருத்துகளை எல்லாம் வைத்துச் சில  கேள்விகளைக் கேட்டு, நாமே அவற்றிற்கு விடை கூறிக்கொண்டால் அவர் யார் என்பது விளங்கும்.     சமூக சீர்திருத்தத்தில் அவர் ஆர்வம் கொண்டிருந்தவரா என்று கேட்டால், ஆம்  என்ற விடை கிடைக்கும்.

    பெண்கள் மறுமலர்ச்சிக்குரிய கருத்துகளை வெளியிட்டவரா என்று கேட்டால் ஆமாம் என்ற பதில் கிடைக்கும். பெண் உரிமைக்காகப் போராடியவரா என்று கேட்டால், ஆம் என்ற பதிலே கிடைக்கும்.     ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்துச் சொன்னாரா என்றால், ஆமாம் என்னும் பதிலே கிடைக்கும். சாதிகள் கூடாது என்ற உண்மையை - தனது உணர்வை எழுதி பேசி வந்தவரா என்றால், ஆமாம் என்னும் பதிலே கிடைக்கும்.     பெண்களை அடிமைப்படுத்தக் கூடாது என்ற தத்துவத்தை வலியுறுத்தியவரா என்று கேட்டால், ஆமாம் என்ற பதிலே கிடைக்கும். நாட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரா என்று கேட்டால் ஆமாம் என்ற பதிலே கிடைக்கும்.

    எந்தப் புரட்சிக் கருத்தையும் இன்று கூற முடியும்.  ஆனால், அதனைச் சொல்ல முடியாத காலத்தில் சொல்வதற்கு அச்சப்பட்ட காலத்தில் அதனைத் துணிவாகச் சொல்லியிருக்கிறார்.  எத்தனை துணிச்சல் இருந்தால் சொல்லியிருக்க முடியும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    அவர் புகழோடு இருந்த காலத்தில் அவர் உயர்ந்த பதவியில் இருந்தபோது இந்த விழா கொண்டாடப்பட்டிருக்குமேயானால் அதில் சிறப்பிருக்காது.  மறைந்த பிறகு இந்த விழா கொண்டாடப்படுவதே சிறப்பாகும்.

    பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாரா சிங் அவர்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றிருக்கிறார்கள்.  அடுத்த ஆண்டு பஞ்சாபில் பாரதியார் பிறந்த நாள் விழாக் கொண்டாடப்படும் என்று அவர் சொன்னார்.  வங்காள முதல்வர் ஜோதிபாசு அவர்கள் நாங்கள் கொண்டாட இருக்கிறோம் உங்களின் உதவி தேவை என்ற கடிதம் எழுதியிருக்கிறார்கள்.  உத்தரப்பிரதேச முதல்வர் நாங்களும் கொண்டாடப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.  மற்ற மாநிலங்களும் அவ்வாறே கொண்டாட  இருக்கின்றன.  பாரதியின் புகழ் தியாகம் ஆற்றல் இந்தியர் அனைவருக்கும் இந்தியத் துணைக் கண்டம் முழுதுக்கும் பயன்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, உலகுக்கே பயன்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

    சிலருக்குச் சில நாட்கள் புகழ் இருக்கலாம். சில வாரங்கள் புகழ் இருக்கலாம்.   சில மாதங்கள் புகழ் இருக்கலாம்.  ஆனால், பாரதியின் புகழ் நூறாண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.  இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு அது இருக்கும்.  சமுதாயம் அவரைப் போற்றும் வாழ்த்தும் என அறுதியிட்டுக் கூறகிறேன்.

    பாரதிக்குத் துணிவு எங்கிருந்து வந்தது?  பிராமண குலத்தில் பிறந்தவர் அவர்.  பிறப்பால் தாழ்த்தப்பட்டவர் இல்லை.  தனக்காகவோ தனது இனத்துக்காகவோ சமுதாயத்துடன் போராட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.  வசதியாகத்தான் வாழ்ந்திருக்கிறார்.  அவரது தந்தை ஒரு சிறிய தொழிற்சாலை நடத்துகின்ற அளவுக்கு அவரது குடும்பச் சூழ்நிலை இருந்திருக்கிறது.  அப்படி இருந்தும் அவர், தனக்காகப் போராடவில்லை.  சமுதாயத்துக்காகப் போராடியிருக்கிறார்.  அவர் தனி மனிதரல்லர் தத்துவத்தின் சின்னம்.

    மற்றவர்கள் சொல்ல அஞ்சும் கருத்துகளை பிரச்சினைகளை சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை அவர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். அவரை தேசிய கவி என்பதால் மகாகவி என்பதா, தேசிய மகாகவி என்பதா?  அந்தப் பெருமையை எண்ணித்தான் விழா கொண்டாடப்படுகிறது. அவர் எந்தக் கருத்தையும் பெரிதாகச் சொல்லியிருக்கிறார். பெண்களின் கற்பு நிலை குறித்து விவரமாக வெளியிட்டிருக்கிறார்.  பெண்களுக்கெனச் சில திட்டங்களைத் தெரிவித்திருக்கிறார்.

    "பெண் பக்குவமடைவதற்கு முன் திருமணம் செய்யக்கூடாது" என்று பாரதியார் கூறியிருக்கிறார்.  அவர் சொல்லிய பிறகு அவ்வாறு திருமணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டு  இருக்கிறது.  ஆனால், தடைச்சட்டம் வருவதற்கு முன்பே எவ்வளவு சிந்தனையோடு-துணிவோடு சொல்லியிருக்கிறார் பாரதி என்பதை இளைஞர் சமுதாயம் நினைவிற்கொள்ள வேண்டும்.

    இன்று நாம் பேசுகின்ற பல புரட்சித் தத்துவங்களை 50 ஆண்டுகளுக்கு முன்பே பாரதியார் சொல்லியிருக்கிறார். பிதுரார்ஜித சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு வழங்கப்பட வேண்டும் என்று பல்லாண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருக்கிறார். கணவன் இறந்த பிறகு ஒரு பெண் மறுவிவாகம் செய்ய விரும்பினால் அதைக் தடுக்கக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    பெண்களுக்குப் படிப்பு வேண்டும் என்று அக்காலத்திலேயே பாரதி கூறியுள்ளார்.  அவர்களுக்குப் பட்டப்படிப்புக் கொடுக்க  வேண்டும் என்று முன்னமேயே சிந்தனையுடன் கூறியுள்ளார் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    அண்ணா அவர்கள் வழியில் பெரியார் அவர்களின்  வழியில் நடைபோடும் இந்த அரசு அவர்களின் கொள்கைகளில் பலவற்றை நிறைவேற்றியிருக்கிறது. பெண்களுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை அடுத்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு துவக்கப் போகிறது. பெண்கள் மறுமலர்ச்சியில் பெரும்பங்கு கொண்டவர் பாரதி.  பெண் விடுதலையின் பெருமைக்காக தர்மயுத்தம் தொடங்குவேன், அதற்கு மகா சக்தி துணைபுரிவாள் என்கிறார் பாரதி.

    தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பெண்களே இருக்கின்றனர் என்று நான் பெருமையுடன் குறிப்பிடுகிறேன்.  கலப்பு மணம் செய்து கொள்ளுங்கள் என்று பாரதி வலியுறுத்தினார்.  தமிழகத்தைப் பொறுத்த வரையில் இப்போது கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நாம் பரிசு கொடுக்கிறோம் பணம் கொடுக்கிறோம்.  

    மாபெரும் தியாகம் செய்த பாரதியை, தியாகி என்பதா வீரர் என்பதா, மறத்தமிழன்  என்பதா!

    தன்னோடு பிறந்தவன் சகோதரன் அவனுக்கு உரிமை கிடையாது என்ற நிலை இருந்தது.  அவனை அடிமை என்று கருதி வந்தார்கள்.  அந்த இழிநிலை ஒழிய வேண்டும் என்று தீவிரமாக இருந்தார் பாரதி.  அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்று அவர் கூறினார்.  "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று நமது அண்ணா அவர்கள் வலியுறுத்தி வந்தார்களே, அதுபோல மனிதரத்தம் அனைத்தும் ஒன்றே என்று தெரிவித்தார் பாரதியார்.

    சமதர்ம சமுதாயம் வேண்டும் என்கிறார் புரட்சி மனம் கொண்ட  பாரதி.  இந்தியா முழுமையும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர் பாரதி.  அதனால், பாரதி பிறந்த நாளை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடவேண்டும்.  தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் பாரதியின் பிறந்த நாள் விழா நடைபெறும்.

    இந்த நாளில் ஏற்றத்தாழ்வை அகற்ற நாம் உறுதி எடுத்துக்கொள்வோம்.  ஒன்றே குலம் என்ற நிலை உருவாகப் பாடுபடுவோம்.

தொடர்வோம் பொன்மனச் செம்மலின் பொன்னான நினைவுகளை…

- ஔவை நடராசன், தொடர்புக்கு: thamizhavvai@gmail.

Create Account



Log In Your Account